கோரக்பூர் அனுபவங்கள் - பிரியமாக வந்த மாடுகள்
Posted by
மனிதக்குரங்கு
on Sunday, December 7, 2008
/
Comments: (0)
வேலை நிமித்தமாக சில முறை உத்தர் பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் நகருக்கு சென்றதுண்டு. அந்த ஊரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், சின்ன வயதில் நாம் டிவியில் பார்த்த மால்குடி டேஸ் சீரியலில் பார்த்த மால்குடி மாதிரியே இருக்கும். ரொம்ப எளிமையான மக்கள், அதிகம் போக்குவரத்து எல்லாம் இருக்காது. சாப்பாடு எல்லாம் ரொம்ப நன்றாக இருக்கும், விலையும் கம்மி. ஊரையும் அந்த மக்களையும் பத்தி பேசனும்னா நிறைய பேசலாம். சில கஷ்டங்கள் இருந்தாலும் மிகவும் பிடித்திருந்தது. சரி, மேட்டருக்கு வருவோம். தினமும் ராத்திரி சாப்பிட்ட பிறகு அலுவலக நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வாக் போவது வழக்கம். ஹோட்டலுக்கு திரும்பி வரும் போது ஒரு தள்ளு வண்டியில் ஸ்வீட் விற்கும் பொடியனிடம் ரப்டி, பால் கோவா இந்த மாதிரி ஐட்டம் ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். அந்த இடத்தில் சில கடைகள் இருந்ததால் அங்கே மக்கள் சாப்பிட்டு போடும் வாழைப்பழ தோல் ஆகியவற்றை சாப்பிடுவதற்காக சில மாடுகள் எப்போதும் நிற்கும். அந்த ஊர் மக்கள் யாரும் விலங்குகளை ஒன்றும் செய்வதில்லை என்பதை நான் பல முறை பார்த்துள்ளேன். வயல்களில் வேலை செய்யும் போது ஆள் உயர கொக்குகள் எல்லாம் விவசாயிகளின் கூடவே நின்று மேய்ந்து கொண்டிருக்கும். சிட்டு குருவிகள், அணில்கள் எல்லாம் பயமின்றி நம் மிக அருகில் வந்து போய் வரும். நம்ம ஊர் மிலிட்டரி ஹோட்டல்களில் கூட இந்த ஐட்டம்கள் இப்போதெல்லாம் கிடைப்பதில்லை என்று நீங்கள் பார்த்திருக்கலாம். நம் ஊரில் லேகியம் ஆகாமல் மிச்சம் இருக்கும் குருவிகள், அணில்கள், கொக்குகள் எல்லாம் கொஞ்சம் உஷார் ஆகி விட்டன போலும். கோரக்பூரில் மாடுகளை எல்லாம் யாரும் தொந்தரவு செய்வதில்லை. ரோட்டில் படுத்திருந்தாலும் அவைகளை யாரும் அடித்து விரட்டுவதில்லை. அவைகளை கண்டு கொள்ளாமல் விட்டு வீடுவார்கள் அவ்வளவு தான். ஒரு முறை அங்கே ஏதோ ஸ்வீட் வெட்டிக்கொண்டு இருந்த போது அருகே நின்றிருந்த மாட்டின் தலையை தொட்டு தடவி கொடுத்தேன். அந்த மாட்டுடன் யாரும் அவ்வளவு அன்பு கட்டியதில்லை போலும். அது வந்து ஒரு சின்ன பூனைக்குட்டியைப் போல மேலே உரசிக்கொண்டு நின்றது. என்ன ஆச்சரியம் , இதை பார்த்த அங்கிருந்த ஒரு 4,5 மாடுகள் எல்லாம் வந்து அதே போல நின்றன. நானும் நண்பர்களும் ஆளுக்கொரு மாடாக தத்தெடுத்து , பசு நேசன்களாக மாறினோம். சுற்றி இருந்த மக்கள் எல்லாம் எங்களை விநோதமாக பார்த்தார்கள். அங்கே யாரும் விலங்குகளிடம் பெரிய அன்பு செலுத்துவதில்லை என்பது உண்மை தான். அன்பு செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை மிலிட்டரி ஹோட்டல்களில் அவைகளை ருசிப்பதை நிறுத்தினாலே போதும். சிட்டு குருவிகள், அணில்கள், மைனாக்கள் எல்லாம் இல்லாமல் ஒரு மாதிரியாக இருக்கிறது வீட்டில்.