இன்சி வின்சி ஸ்பைடர்

பெங்களுருவில் நாங்கள் இருந்த வீட்டின் வெராண்டாவில் சட்டிகளில் சில செடிகள் வைத்திருந்தோம். ஒரு சட்டியில் இருந்த மணி பிளான்ட் கொடிகளை மேலே படர விட்டிருந்தோம். அதில் ஒரு சிலந்தி வலை வைத்திருந்தது. இரவு நேரங்களில் அந்த அழகான வலையின் நட்ட நடுவில் அந்த சிலந்தி அமர்ந்திருக்கும். அவ்வப்போது மிக அருகே நின்று அதை கவனித்துக் கொண்டிருப்பேன். அந்த சிலந்தி வலை மீது எதாவது பூச்சியோ, இலையோ விழுந்தால் உடனே வேகமாக அந்த இடத்தை நோக்கி செல்லும். சரி, ஒரு கொசுவை அடித்துப் போட்டு பார்த்தால் என்ன என்று தோன்றியது. கொசு அடிப்பது என்னமோ சுலபமான வேலை தான், ஆனால் அதை ஒரு சிலந்திக்காக அடிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? சிலந்திகள் பூச்சிகளை உண்ணுவதில்லை, அவற்றின் ரத்தம் மற்றும் body fluid மட்டுமே உரிந்துகொள்ளும். இதனால் கொசுவை அடிக்கும் போது நசுங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் உயிர் இருக்கும் படி பார்த்து அடித்தால் தேவலை. பல முறை சரியாக அடிக்காததால் கொசு தப்பித்தது உண்டு. ஒரு வழியாக சரியான பக்குவத்தில் கொசுவை அடிக்க கற்றுக்கொண்டேன். கொசுவை சிலந்தி வலையின் மீது போடுவதும் ஒரு கடினமான வேலை தான். இரண்டு விரல்களினால் லாவகமாகப் பிடித்துக்கொண்டு சிலந்தி வலையில் இருந்து ஒரு சில செண்டி மீட்டர் தூரத்தில் இருந்து வீச வேண்டும். தூரம் அதிகமாக இருந்தால் கொசு காற்றினால் அடித்து செல்லப்படும். சில சமயங்களில் வலையின் இடுக்குகளில் வழியாக கொசு வெளியேறி விடவும் வாய்ப்பு உண்டு. ஒரு வழியாக இதை எல்லாம் ஆராய்ந்து கற்றுக் கொண்டேன். நான் வீசிய கொசுவை முதல் முறையாக அந்த சிலந்தி வந்து உண்ட போது நான் பெருமிதம் அடைந்தேன். இது ஒரு சில நாட்கள் நடந்தது. ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்த நண்பர் ஒருவரிடம் பகலில் அந்த வலையின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். என்ன ஆச்சரியம் ! இலைகிளின் இடையே மறைந்து தூங்கிக்கொண்டிருந்த சிலந்தி வேகமாக அதன் வலைக்கு வந்தது. என்னுடைய குரல் கேட்டு தான் வந்தது என்றெல்லாம் நான் பீலா விட மாட்டேன். தன் வலையின் அருகே வந்து நின்றிருந்த எங்களை உணர்ந்து கொசு கிடைக்கும் என்று நினைத்து வந்ததை நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது. ஒரு சில நாட்கள் காணமல் சென்றுவிட்டு மீண்டும் வந்து அதே இடத்தில் வலை வைப்பதும் ஒரு சில வாரங்கள் நடந்தது. பிறகு அதே இடத்தில் பல சிலந்திகள் குடியேறின. வீட்டிற்கு வருபவர்கள் எல்லாம் தங்களுக்கு என்னமோ பேய் பங்களாவில் நுழைவது போல் இருப்பதாக கூறுவார்கள் ஆனாலும் நான் பிடிவாதமாக அந்த வலைகளை கலைக்கக் கூடாது என்று கூறி இருந்தேன். வேலை நிமித்தமாக வேறு இடம் செல்ல வேண்டி ஆனதால் அந்த வீட்டை மாற்ற வேண்டியது ஆயிற்று. பின்னர் எப்போதாவது இதே போல் சிலந்திகளுடன் நட்பு பாராட்ட கிடைக்குமா என்று தெரியவில்லை ஆனால் உங்கள் வீட்டில் எங்காவது சிலந்தி வலை இருந்தால் கொசு அடித்துப் போட்டு பாருங்கள். நான் தான் விலாவாரியாக எப்படி கொசு அடித்துப் போடுவது என்று மேலே கூறி இருக்கிறேனே? கொசுறு - அந்த சிலந்திக்கு நானும் என் மகளும் வைத்த பெயர் "இன்சி வின்சி". பல முறை நிலாச்சோறு மாதிரி சிலந்தி சோறு சாப்பிட்டிருக்கிறாள் அவள்.

பாம்பு பிடித்த அனுபவம் - 1

பூனாவில் எங்கள் அலுவலகம் மலை அடிவாரத்தில் இருந்ததையும் அங்கே சில பல ஜந்துக்கள் வந்து சென்று கொண்டிருந்ததையும் பற்றி எழுதி இருந்தேன். பாம்புகள் அங்கே அடிக்கடி இரவுகளில் தென்படும் ஆனால் ஒரு முறை பகலில் தண்ணீர் தொட்டி அருகே ஒரு பாம்பு சுருண்டு படுத்துக் கொண்டிருந்தது. நமக்கு தான் எல்லாத்துலையும் அறை குறை ஞானம் ஆச்சே. மெட்ராஸ் பாம்பு பூங்காவில் ராமுலஸ் விட்டேகர் எழுதிய "Common Indian Snakes" மற்றும் "A Field Guide of Indian Snakes" ஆகிய புத்தகங்களை வாங்கிப் படித்து பாம்புக்கும் மரவட்டைக்கும் வித்தியாசம் காணும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருந்தேன். பாம்புகள் தென்படும் போதெல்லாம் அது எந்த பாம்பு என்று சக ஊழியர்களிடம் பீலா விட்டுக்கொண்டிருப்பேன். இதில் பெரிய காமெடி என்னவென்றால் எனக்கு "கலர் பிலைண்ட்நெஸ்" உண்டு. அதனால் சில பல கலர்களில் குழப்பம். ( பலர் கலர் பிலைண்ட்நெஸ் என்றால் கருப்பு வெள்ளை தவிர மற்ற நிறங்கள் தெரியாதா என்று கேட்டதுண்டு). பகலில் இந்த பாம்பைப் பார்த்ததும் படு குஷி ஆகி விட்டேன். அதைக் கையில் பிடித்தால் என்ன என்று தோன்றியது. பாம்பு வேறு கொஞ்சம் சிறியதாக இருந்தது கொஞ்சம் தைரியத்தை கொடுத்தது. சின்ன நாகப் பாம்பு கொத்தினாலும் அம்பேல் தான் என்றெல்லாம் அப்போது தோணவில்லை. கூட இருந்த நண்பர்கள் (? அடப் பாவிகளா) வேறு உற்சாகப்படுத்தி (உசுப்பேத்தி) விட்டார்கள். சட்டென்று சென்று அதைப் பிடித்து விட்டேன். பாம்புக்கும் பிடி படுவது அது தான் முதல் முறை போலும். 2-3 முறை என்னை கொத்துவது போல் கை அருகே வந்தது. பிறகு என்ன நினைத்தோ பரிதாபப்பட்டு விட்டு விட்டது. அப்போது தான் உதித்தது ஞானோதயம் - இனியும் பாம்பு விளையாட்டு எல்லாம் வேண்டம் என்று. சற்று தொலைவில் இருந்த புதர் அருகே விட்டு விட முடிவு செய்தேன். வேகமாக ஓடினால் மானப் பிரச்சினை வேற. அதனால் முகத்தை தைரியமாக வைத்து கொண்டு பாம்பையும் உயிரையும் கையில் பிடித்து கொண்டு சென்று அந்த புதரில் விட்டு வந்தேன். அதன் பிறகு என்னை என்னமோ சின்ன வயதிலிருந்தே பாம்புகளோடு ஒட்டி உறவாடியவன் போல ஒரு இமேஜ் உண்டானது. எங்கள் அலுவலக சமையல் பெண்மணியும் அக்கம் பக்கத்திலெல்லாம் புகழை பரப்பி விட்டாள். பிறகு பொறுமையாக ஆராய்ச்சி செய்த பொது தான் தெரிந்து கொண்டேன் - அது "Trinket Snake" வகையை சேர்ந்தது, விஷமற்றது என்று. தமிழில் "அழகு பாம்பு" என்று போட்டிருந்தது ஆனால் நான் கேள்வி பட்டதில்லை ( அவ்வளவு தெரிந்து வைத்திருந்தேன்). அதன் பிறகு பின்னொரு முறை அலுவலகத்தில் வேறு ஒரு பாம்பு பிடித்தோம். அது வேறொரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி.

எங்கள் காவல் நாய்

பூனாவில் வேலை செய்து கொண்டிருந்த நாட்களில் எங்கள் அலுவலகம் ஒரு சின்ன மலையின் அடிவாரத்தில் இருந்தது. அருகில் வேறு வீடுகள் எல்லாம் அதிகம் இருக்காது. சுற்றி மரங்கள் எல்லாம் அதிகம் இல்லா விட்டாலும் செடிகள் புதர்கள் எல்லாம் நிறைய இருக்கும். நிறைய பறவைகள், பாம்புகள் (அவைகளை பற்றி விவரமாக பிறகு சொல்கிறேன்) எல்லாம் வரும். இவைகள் எல்லாம் இல்லாமல் தெரு நாய்கள் பல எங்கள் அலுவலகத்திற்கு அடிக்கடி வரும். மதிய உணவின் போது மிச்சம் ஆகும் சப்பாத்திகளை அவைகளுக்கு போட்டு நட்பு வளர்த்து வைத்திருந்தோம். அவைகளில் ஒரு நாய்கள் குடும்பம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு தாய் நாய் தன் குட்டிகளை கூட்டிக்கொண்டு வரும். 5 குட்டிகள் இருந்ததாக ஞாபகம். நாங்கள் போடும் சப்பாத்திகளை தன் வாயால் எடுத்து ஒவ்வொரு குட்டிக்கும் சமமாக பங்களித்து கொடுக்கும். இது போல் வேறு எந்த நாயும் செய்து நான் பார்த்தது இல்லை. குட்டிகள் எல்லாம் துரு துருவென இருக்கும். அந்தக் கூட்டம் வருவதை பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். மிகவும் ஆனந்தமாக விளையாடிக்கொண்டு மெதுவாக அவைகள் ஓடி வருவதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். மாலை 5:30 - 6:00 மணி அளவில் தினமும் வந்து கொண்டிருந்த அந்தக் கூட்டம் திடீர் என ஒரு நாள் வருவதை நிறுத்தி விட்டன. பிறகு சில நாட்கள் கழித்து குட்டிகள் மட்டும் வந்தன. மற்றவைகள் என்ன ஆயின என்ற கவலை இருந்த போதிலும் இவைகள் வந்ததே பெரிய சந்தோஷமாக இருந்தது. திடீரென ஒரு நாள் , ஒரு குட்டி மட்டும் வந்து வெளியே போட்டிருந்த பெஞ்சின் அடியில் படுத்து மிகுந்த வேதனையுடன் முனகிக்கொண்டிருந்தது. பார்த்தால் அதன் இடது பின்னங்கால் மீது ஏதோ ஸ்கூட்டர் போன்ற வாகனம் ஏறியது போல பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அந்த குட்டி மிகவும் உடல் இளைத்து போயிருந்தது. எங்களுக்கு அந்த குட்டி உயிர் பிழைக்கும் என தோன்றவில்லை. அந்த மரண வேதனையிலும் அந்த குட்டி எங்களை தேடி வந்திருந்தது. அதன் முன்னால் ஒரு குண்டாவில் பால் ஊற்றி வைத்தோம். எத்தனை நாட்களாக பட்டினி கிடந்ததோ தெரியவில்லை, மிகவும் சிரமப்பட்டு எழுந்து வந்து அந்த பால் முழுவதையும் குடித்து முடித்தது . மாலையில் சில பிரெட் துண்டுகளை பாலில் நலைத்து கொடுத்தோம். அவற்றையும் சாப்பிட்டு விட்டு முனகிக்கொண்டே படுத்திருந்தது. காலை பார்க்கும் போது உயிருடன் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு துளியும் இல்லை. ஆனால் அது நாளுக்கு நாள் உடல் நிலை முன்னேறி எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இடது பின்னங்கால் முழுவதும் செயல் இழந்து போனது. அடுத்த சில வாரங்களில் பழைய உற்சாகம் திரும்பியது. அது இப்போது எங்கள் அலுவலகத்தின் காவல் நாயாக மாறியது. யாராவது புதிய நபர்கள் வந்தால் அதற்கே உரிய மழலைக் குரலுடன் குரைத்துக் கொண்டு மூன்று கால்களில் வேகமாக ஓடி செல்லும். அதைப் பார்த்து வந்தவர்கள் பயந்து விடுவார்கள் ஆனால் எங்களுக்கோ சிரிப்பாக இருக்கும். இவ்வாறாக 2-3 மாதங்கள் எங்களுடன் மிகப்பிரியமாக இருந்த குட்டி ஒரு நாள் திடீரென காணாமல் போனது. எங்கள் அலுவலகத்தை விட்டு 100 மீட்டர் கூட தாண்டி போகாத அது வேறு எங்கும் சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்த போதும் ஒரு நப்பாசையில் அக்கம் பக்கத்தில் எல்லாம் தேடினோம். எங்கள் அலுவகத்தில் சமையல் வேலை செய்து வந்த ஒருவள் தான் அதை எப்போதும் கத்திக்கொண்டே இருப்பாள். அவள் மீது தான் எங்களுக்கு சந்தேகம். அதை எங்கோ எடுத்து சென்று விட்டு விட்டாள் என்பது எங்கள் ஐயம். 8-9 வருடங்கள் கடந்திருந்தாலும் இப்போது எழுதும் போது கூட வருத்தமாக இருக்கிறது.