மனிதக் குரங்கின் நண்பர்கள்

ரொம்ப நாட்களாக என் நண்பரிகளிடம் இருந்து ஒரு கம்ப்ளைன்ட். மற்ற மிருகங்களைப் பற்றி மட்டுமே எழுதறியே , எங்களைப் பத்தியும் ஏதாவது எழுது என்று டார்ச்சர் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். எல்லோருடைய சிறப்புகளைப் பற்றியும் எழுத முடியாது என்பதால் சிறப்பு பெயர்கள் பெற்றிருந்த சிலரைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன். படித்துக் கொண்டிருக்கும் போது நம்முடன் பல்பு, ப்ளேடு போன்ற அக்றிணை பெயர்கள் யாருக்காவது வைக்கப் பட்டிருக்கும். கொக்கு என்று பெயர் சூட்டப் பெற்ற நபர்கள் நம்முடைய மத்தியில் பலர் உலாத்தி இருந்திருப்பார்கள். ஆனால் என்னை மிகவும் கவர்ந்த இருவர் பற்றி அவசியம் கூற வேண்டும். ஒருவன் பெருச்சாலி - பார்ப்பதற்கு ஒன்னும் அப்படி இருக்க மாட்டான், சொல்லப் போனால் ஒல்லியாகத் தான் இருப்பான். அவனுடைய குணாதிசியம் விநோதமானது. தூங்கப் போகும் போது எல்லோரையும் போல மெத்தை மேல் தான் படுத்திருப்பான், ஆனால் இரவில் எப்போது என்ன ஆகுமோ தெரியாது காலையில் எழுந்து பார்த்தால் மெத்தைக்கு கீழே படுத்திருப்பான். ஒல்லியாக வேறு இருந்ததால் சில சமயங்களில் ஆள் இருக்கானா இல்லையா என்றே தெரியாது. காலை எழுந்த உடன் தலையை பயங்கரமாக சொறிய ஆரம்பித்து விடுவான். அந்த சத்தம் ஒரு வேளை பெருச்சாலி மண்ணைப் பறிப்பது போல இருந்ததோ என்னவோ அவனுக்கு அந்தப் பெயரே சூட்டப் பெற்றிருந்தது. வகுப்புகளுக்கு செல்ல நேரம் ஆகி விட்டால் இவனை எழுப்புவதற்காக எங்கள் நண்பன் ஒருவன் ஒரு விசேஷ முறை வைத்திருந்தான். கிட்டே சென்று மெத்தையை எட்டி உதைப்பான். " அடிங்க" என்று அடியில் இருந்து குரல் வந்தால் ஆள் இருக்கிறான் என்று தெரிந்து கொள்வோம். அப்போது மூஞ்சுறு போல இருந்தவன் சமீபமாக பார்த்த போது உண்மையிலயே பெருச்சாலி மாதிரி தான் பெருத்திருந்தான். அடுத்தது காண்டா என்று வெறுப்புடன் அழைக்கப் பெற்ற காண்டா மிருகம். இவனும் எங்கள் அறைத் தோழன் தான். இவன் சற்று குண்டாக இருப்பான். நடக்கும் போது எதிரில் யார் வருகிறார்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டான். அனிமல் பிளானெட்டில் காண்டா மிருகத்திடம் பிலிம் காட்டிக் கொண்டிருக்கும் நபரை அது எப்படி தாக்க முயலும் என்பதை கண்டிருப்பீர்கள். தலையை கீழே குனிந்து கொண்டு வேகமாக ஓடி வரும் காண்டா மிருகத்தைப் போல தான் இவனும் நடப்பான். என்றாவது ஒரு நாள் அதிசயமாக சீக்கிரம் எழுந்து விட்டால் ரூமுக்குள் இங்கும் அங்கும் நடந்து எங்கள் தூக்கத்தை கெடுத்து வசை வார்த்தைகளை வாங்கிக் காட்டிக் கொள்வான். இவனுக்கு இப்போது ஒரு சின்ன காண்டா இருப்பதாக தகவல்.

பாம்பு பிடித்த அனுபவம் - 2

பூனாவில் எங்களுடைய அலுவலகம் முதலில் ஒரு மலை அடிவாரத்தில் இருந்தது. பின்னர் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்துக்கு மாற்றி வந்தோம். அங்கு சென்றும் என்னுடைய பாம்பு புகழ் தொடர்ந்து வந்தது. ஒரு நாள் மாலை நேரம் தம் அடிக்க சென்ற நண்பர்கள் (?) பார்க்கிங்கில் ஒரு பாம்பு சுருண்டு படுத்திருப்பதாக வந்து பிரேக்கிங் நியூஸ் கொடுத்தார்கள். இதைக் கேட்டதும் எனக்கு வில்லங்கம் வரப்போகிறது என்று புரிந்து விட்டது. உடனே அது வரை கம்ப்யூட்டரில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நான், படு பிஸியாக இருப்பது போல் பாவ்லா பண்ண ஆரம்பித்தேன். ஆனாலும் இந்த துரோகிககள் படை சூழ கீழே செல்ல வேண்டியதாயிற்று. போகும் பொது, இது பச்சை பாம்பு போல் எனக்கு தெரிந்த, விஷமற்ற பாம்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். ஆனால் அதுவோ எனக்கு தெரியாத ஒரு இனமாக கறுப்பு / பிரவுன் நிறத்தில் இருந்தது. என்ன பாம்பு என்று பீலா விடலாம் என்று யோசித்து கொண்டிருந்தத போது அந்த பாம்பை என்ன செய்யலாம் என்று வேறு ஒரு விவாதம் கிளம்பியது. சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அதை அடித்து விடலாம் என்று சொன்னார்கள், ஆனால் என்னுடைய துரோகிகள் படையோ என்னைக் காட்டி - இவன் வெறும் கையிலயே பாம்பை பிடிப்பான் என்று கூறி பில்ட் அப் குடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதைக் கேட்ட கூட்டம் படு குஷியாகி விட்டது. அதைப் பிடித்து காத்ரஜ் பாம்புப் பூங்காவிற்கு தகவல் கொடுக்கலாம் என்று ஒட்டு மொத்தமாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பாம்பைக் கையில் பிடித்து அப்பறம் எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவா? இப்போது இருட்டாகி விட்டது அதனால் கையில் பிடிப்பது நல்லதில்லை என்று ஒரு வழியாக மக்களை நம்ப வைத்தேன். அதை ஒரு பக்கெட்டினுள் செல்ல வைத்து அடைத்து வைப்பதென்று முடிவு மாற்றப் பட்டது. இதைக் கேட்ட கூட்டம் ஒட்டு மொத்தமாக கலைந்தது - என்னுடைய அலுவலக எதிரிகள் தவிர. அந்த பாம்பை பக்கெட்டினுள் செல்ல வைப்பதற்குள் நாங்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. அமைதியாக இருந்த அது, நாங்கள் சுற்றி பக்கெட்டும் குச்சியுமாக நிற்பதை பார்த்து கடும் சினத்திற்கு உண்டானது. இவ்வளவு பெரிய சத்தத்துடன் இப்படி ஒரு பாம்பு சீர முடியும் என்று அப்போது தான் தெரிந்து கொண்டேன். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்புக்கே போர் அடித்து விட்டதோ என்னமோ, ஒரு பக்கெட்டினுள் சென்று விட்டது. அப்பாடா என்று, எடுத்து சென்று ஒரு பாத் ரூமில் வைத்தோம். பாம்பு பூங்காவிற்கு போன் செய்த போது, 2 நாட்களுக்கு பிறகு தான் வர முடியும் என்று கூறி விட்டார்கள். அது வரை எங்களுக்கு ஒரே பயம், எப்படியாவது தப்பித்து வெளியே வந்து விட்டால் என்ன செய்வதென்று. 2 நாட்கள் பிறகு ஒரு வெள்ளைக்காரர் உட்பட 3 பேர் வந்தார்கள். அவர்களில் ஒருவர் பாம்பைப் பார்த்தும் டக்கென்று கையை விட்டு எடுத்து விட்டார். அவர் கூறியது - இது Trinket Snake என்று. அடாடா, மீண்டும் ஒரு அழகு பாம்பா என்று நினைத்தேன். தெரிந்திருந்தால் நானே கையில் பிடித்திருப்பேனே? முன்னர் பிடித்தது ஒரு பாம்பு குஞ்சு போலும், அதனால் அதன் நிறம் வேறு மாதிரியாக இருந்தது. அவரிடம் இருந்து பாம்பை வாங்கி கொஞ்சம் டேமேஜ் கன்ட்ரோல் செய்து கொண்டேன். அப்படியும் எங்கள் அலுவகத்தில் என்னைத் தவிர வேறு யாரும் அந்த பாம்பை கையில் எடுக்க முன் வரவில்லை என்பதை நினைத்து மனதை தேற்றிக் கொண்டேன் - வேறு என்ன செய்ய முடியும்?

காக்கா கதைகள் - 1

நம்மை சுற்றி எப்போதும் இருப்பதாலோ என்னவோ காக்கைகளைப் பற்றி நாம் எப்போதும் அதிகம் கண்டுகொள்வது கிடையாது. ஆனால் பறவை இனங்களிலேயே மிகவும் புத்திசாலியானது என்று கருதப்படுவது நம் காக்கையார் தான். சென்னையில் இருந்த போது என் அம்மா தினமும் மதிய உணவிற்கு பிறகு ஒரு காக்காவிற்கு ஏதாவது சாப்பிட வைப்பார்கள். தவறாமல் தினமும் அதே நேரத்திற்கு வந்து முதலில் அமைதியாக இருக்கும். ஏதாவது வேலையாக இருந்து ஆகாரம் வைக்க சில நிமிடங்கள் தாமதம் ஆனால் ஒரெ ஒரு முறை "கா" என்று கத்தும். அப்படியும் தாமதம் ஆனால் தன் மூக்கினால் ஜன்னல் கண்ணாடியை கொத்தும். வேறு ஏதாவது ரூமில் இருந்தால் மற்ற ஜன்னல்களில் சென்று இதையே செய்யும். ஒரு நாளும் சாதம் உண்ணாது, சப்பாத்தி, பூரி, தோசை இது மாதிரி ஏதாவது டிபன் ஐட்டம் மட்டும் தான் சாப்பிடும். பூனாவில் இருந்த போது தினமும் இதே மாதிரி பால்கனி சுவற்றின் மேல் மீதமாகும் ஏதாவது உணவுகளை காக்கைகளுக்காக வைப்போம். நேரம் தவறாமல் தினமும் அதே நேரத்தில் பல காக்கைகள் வரும்.நாங்களும் பந்தியில் பரிமாறுவது போல் தீரத் தீர கொஞ்சம் உணவு வைப்போம். ஒரு நாள், வீட்டில் எல்லோரும் ஊருக்கு போயிருந்தார்கள்- நானும் முந்தைய நாள் இரவு எதுவும் சமைக்கவில்லை. நேரத்திற்கு வரும் காக்கைகள் ஏமாந்து போய்விடுமே என்று எதாவது இருக்கிறதா என்று தேடினேன். பிரிட்ஜில் இருந்த பால் கோவா (பேடா) தவிர வேறு எதுவும் இல்லை. ஒரு 10 துண்டுகளை வெளியில் வைத்து விட்டு ஆபீஸ் சென்று விட்டேன். சாயந்திரம் பால்கனியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது பார்த்தால் சுவற்றின் மேல் ஏதோ ஒரு காட்டுப்பூ இருந்தது. அது எப்படி அங்கு வந்ததோ தெரியவில்லை. எனக்கு என்னமோ ஒரு காக்கா தான் ஸ்வீட்டுக்கு நன்றி சொல்லி வைத்ததோ என்று ஒரு கற்பனை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. நாம் செய்யுளில் படித்தது போல் உணவு உண்ணும் போது அவை மற்ற காக்கைகளை கரைந்து அழைப்பதெல்லாம் இல்லை. ஒரு வேலை சங்க காலத்தில் அவை அப்படி இருந்திருக்கலாம். மனிதர்கள் போலவே காலப் போக்கில் அவைகளும் சுய நலமும், பொறாமையும் கொண்டவைகளாக மாறி விட்டன போலும். நம் இனத்தவர் என்ன ஆனால் என்ன, எனக்கு குவாட்டரும், பிரியாணியும் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் இந்த காலத்தில் காக்கைகள் மட்டும் இப்படி இருப்பதில் என்ன ஆச்சரியம்?

நாய் புத்தி ?

நாய் புத்தி என்று அடிக்கடி மற்றவர்களை திட்டுவோம். எதற்காக இந்த மாதிரி திட்டுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் நான் அறிந்த சில நாய்களின் குணாதிசியங்களை சொல்லுகிறேன். சிறுவனாக இருந்த போது என் பெரியம்மா டாமி என்று ஒரு பொமரேனியன் நாய் வைத்திருந்தார்கள். அவர்களுடைய வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் என்னை மனுஷனாகக் கூட மதிக்காது. அதை வாக்கிங் கூட்டிப் போவதற்காக இருந்த செயினை யாரவது தொடும் சத்தம் கேட்டால் எங்கிருந்தாலும் அப்படி ஒரு கூச்சல் போட்டுக் கொண்டு வரும். மனிதர்களைப் போலவே பொசெசிவ் குணம் கொண்டது. ஆனால் நாங்கள் ஊருக்கு கிளம்பும் போது மிகவும் சோகமாக ஆகிவிடும். பஸ் ஸ்டாப் செல்லும் போது அது திரும்பி வீட்டுக்கு செல்லும் படி இழுக்கும். பின்னர் அதற்கு வயதான பின்பு கேடராக்ட் வந்து சுத்தமாக கண் தெரியாமல் போய் விட்டது. அப்போதெல்லாம் மனிதர்களுக்கே கேடராக்ட் ஆபரேஷன் என்பது மிகக் கடினமான ஒரு அறுவை சிகிச்சையாக இருந்தது. அதனால் அதற்கு ஒன்றும் செய்ய இயலவில்லை. அப்போது அது மிகவும் அமைதியாக இருக்கும். அதனிடம் பேசினால் வாலை மட்டும் மெதுவாக ஆட்டிக்கொண்டிருக்கும், சத்தம் எதுவும் போடாது - பழுத்து பக்குவம் அடைந்த ஒரு ஞாநி போல இருக்கும். அடுத்து சென்னையில் எங்கள் வீட்டின் அருகே இருந்த ஒரு நாய் - பெயர் மீனா . எனக்குத் தெரிந்து தமிழ் பெயர் சூட்டப்பட்டிருந்த முதல் நாய் அது தான். இப்போதெல்லாம் நம் கிராமங்களில் கூட குழந்தைகளுக்கே தமிழ் பெயர் யாரும் வைப்பதில்லை. பரம சாதுவான மீனாவும் எங்கள் அனைவரின் செல்லப் பிராணியாக திகழ்ந்தது. என் அம்மா வீட்டின் அருகே இருக்கும் ஒரு சின்ன கோவிலுக்கு தினமும் போவது வழக்கம். தவறாமல் மீனாவும் என் அம்மாவுடன் செல்லும். சாமி கும்பிடும் போது அமைதியாக இருந்து, பரிகாரத்தை சுற்றும் போது அதுவும் சுத்தும். ( பக்திமான் போல பக்திநாய்? ) கடைசியாக என் மாமா வீட்டு கருப்பு நாய் - பெயர் கரியான். அந்த ஏரியாவின் தாதா, முடிசூடா மன்னன் எல்லாம் அவன் தான். வட்டாரத்து நாய்களை எல்லாம் கூட்டு சேர்த்திக்கொண்டு அவர்கள் பின் தொடர ஏரியாவை வளம் வருவான். வீட்டுக் காம்பவுண்டுக்குள் எதாவது பாம்பு வந்துவிட்டால் அதை மோப்பம் பிடித்து கொன்று விடுவான். விரியன் பாம்பு கடித்து பரலோகத்தின் நுழைவாயில் வரை சென்று திரும்பியும் சற்றும் வீரம் குறையாத அஞ்சா நெஞ்சன். ஆனால் எங்கள் வீட்டு கேட்டை தாண்டி வர மாட்டான். அந்த ஏரியாவுக்கு என் பெற்றோர்கள் குடி வந்த புதிதில் கேட்டைத் தாண்டி உள்ளே வந்து போர்டிகோவில் இருக்கும் ஒரு தூணின் மேல் மூச்சா போவது வழக்கமாக கொண்டிருந்தானாம். இதனை வன்மையாக கண்டித்த என் அம்மாவின் வசை வார்த்தைகளை கண்டு பயந்தோ அல்லது ரோஷம் வந்தோ எங்கள் வீட்டு கேட்டை தாண்டி இப்போதும் வருவதில்லை. கடை வீதியில் தாதா போல உலா வரும் நபர் பூ விற்கும் பாட்டியிடமோ அல்லது பெட்டி கடை வைத்திருக்கும் பெண்மணியிடமோ திட்டு வாங்குவதில்லையா அந்த மாதிரி தான். நம்மில் பலர் எத்தனை பேர் இது மாதிரி இருக்கிறோம்? இப்படிப் பட்ட நாய்களை எல்லாம் பார்க்கும் போது ஒரு வேளை நாய்கள் எல்லாம் தங்களுக்குள் "உனக்கு ஏன் இந்த மனுஷ புத்தி ?" என்று கேட்டுக்கொள்ளுமோ என்று தோன்றுகிறது.

மீன் பிடித்த அனுபவங்கள்

சின்ன வயதில் இருந்தே மீன்கள் மீது எனக்கு அலாதிப் பிரியம் ஏன் என்றால் மீன்கள் மட்டும் தான் என் அப்பா வைத்துக் கொள்ள அனுமதிப்பார். பள்ளியிலிருந்து திரும்பும் போது தெருவில் ஏதாவது நாய் அல்லது பூனைக் குட்டிகள் இருந்தால் வீட்டிற்கு எடுத்து வந்து விடுவேன். என் அப்பா ஆபீஸில் இருந்து வந்த உடன் அவைகள் வெளியேற்றப்படும். எவ்வளவு தான் கெஞ்சிக் கூத்தாடினாலும் பப்பு வேகாது. அதனால் மீன்கள் மட்டும் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படிருந்தது. அப்போதெல்லாம் நாங்கள் குடி இருந்த வீட்டின் அருகில் இருந்த ஒரு வெற்றிடத்தில் மழை நீர் தேங்கி குளம் போல இருக்கும். அங்கே பல விதமான மீன்கள் இருக்கும் - கெண்டை, கெளுத்தி, ஜிலேபி என்று பல வகைகள். சிறுவனாக இருந்த போது அங்கே மீன் பிடித்துக்கொண்டிருக்கும் பெரிய பையன்களிடம் கெஞ்சி எதாவது ஒரு மீன் வாங்கி வந்து ஹார்லிக்ஸ் பாட்டிலில் விட்டு வைப்பேன். பின்னர் சற்று பெரியவன் ஆன பின்பு நானே தண்ணீருக்குள் இறங்கி (ரொம்ப ஆழம் எல்லாம் இல்லை, சும்மா கணுக்கால் வரைக்கும் இருக்கும் இடத்தில் தான்) மீன்கள் ஒன்றிரண்டு பிடித்து வருவேன். ஒரு முறை பள்ளியில் இருந்து வரும் போது மீன் என்று நினைத்து தவளைக் குஞ்சுகளை வாட்டர் பாட்டிலில் பிடித்து வந்து அம்மாவிடம் உண்டை வாங்கினேன். இன்னும் சற்று பெரியவன் ஆன பின்பு ஒரு சில சக குரங்குகளுடன் மயில் வாகனத்தில் ஏறி (சைக்கிள் தான்) இப்போது பாஷ் ஏரியவாகக் கருதப்படும் கொட்டிவாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களுக்கு சென்று குட்டைகளில் இருந்து மீன்கள் பிடித்து வருவோம். கொட்டிவாக்கத்தில் இருந்த ஒரு குட்டையில் குராமி மீன்கள் நிறைய இருந்தது மிகப் பெரிய ஆச்சரியம். (Dwarf மற்றும் Blue குராமி). அங்கே ஒரு சில இடங்களில் கடல் நீர் உள்ளே வந்து Scat மீன்கள் வேறு இருக்கும். இதை எல்லாம் இப்போது நினைத்து பார்க்கையில் ஏதோ கனவு போல தோன்றுகிறது. நான் பள்ளி முடிக்கும் போதே வீட்டின் அருகே இருந்த குளம் மூடப்பட்டு அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்து விட்டன. இப்போதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாதிரி அனுபவம் எல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லையே என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

இன்சி வின்சி ஸ்பைடர்

பெங்களுருவில் நாங்கள் இருந்த வீட்டின் வெராண்டாவில் சட்டிகளில் சில செடிகள் வைத்திருந்தோம். ஒரு சட்டியில் இருந்த மணி பிளான்ட் கொடிகளை மேலே படர விட்டிருந்தோம். அதில் ஒரு சிலந்தி வலை வைத்திருந்தது. இரவு நேரங்களில் அந்த அழகான வலையின் நட்ட நடுவில் அந்த சிலந்தி அமர்ந்திருக்கும். அவ்வப்போது மிக அருகே நின்று அதை கவனித்துக் கொண்டிருப்பேன். அந்த சிலந்தி வலை மீது எதாவது பூச்சியோ, இலையோ விழுந்தால் உடனே வேகமாக அந்த இடத்தை நோக்கி செல்லும். சரி, ஒரு கொசுவை அடித்துப் போட்டு பார்த்தால் என்ன என்று தோன்றியது. கொசு அடிப்பது என்னமோ சுலபமான வேலை தான், ஆனால் அதை ஒரு சிலந்திக்காக அடிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? சிலந்திகள் பூச்சிகளை உண்ணுவதில்லை, அவற்றின் ரத்தம் மற்றும் body fluid மட்டுமே உரிந்துகொள்ளும். இதனால் கொசுவை அடிக்கும் போது நசுங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் உயிர் இருக்கும் படி பார்த்து அடித்தால் தேவலை. பல முறை சரியாக அடிக்காததால் கொசு தப்பித்தது உண்டு. ஒரு வழியாக சரியான பக்குவத்தில் கொசுவை அடிக்க கற்றுக்கொண்டேன். கொசுவை சிலந்தி வலையின் மீது போடுவதும் ஒரு கடினமான வேலை தான். இரண்டு விரல்களினால் லாவகமாகப் பிடித்துக்கொண்டு சிலந்தி வலையில் இருந்து ஒரு சில செண்டி மீட்டர் தூரத்தில் இருந்து வீச வேண்டும். தூரம் அதிகமாக இருந்தால் கொசு காற்றினால் அடித்து செல்லப்படும். சில சமயங்களில் வலையின் இடுக்குகளில் வழியாக கொசு வெளியேறி விடவும் வாய்ப்பு உண்டு. ஒரு வழியாக இதை எல்லாம் ஆராய்ந்து கற்றுக் கொண்டேன். நான் வீசிய கொசுவை முதல் முறையாக அந்த சிலந்தி வந்து உண்ட போது நான் பெருமிதம் அடைந்தேன். இது ஒரு சில நாட்கள் நடந்தது. ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்த நண்பர் ஒருவரிடம் பகலில் அந்த வலையின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். என்ன ஆச்சரியம் ! இலைகிளின் இடையே மறைந்து தூங்கிக்கொண்டிருந்த சிலந்தி வேகமாக அதன் வலைக்கு வந்தது. என்னுடைய குரல் கேட்டு தான் வந்தது என்றெல்லாம் நான் பீலா விட மாட்டேன். தன் வலையின் அருகே வந்து நின்றிருந்த எங்களை உணர்ந்து கொசு கிடைக்கும் என்று நினைத்து வந்ததை நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது. ஒரு சில நாட்கள் காணமல் சென்றுவிட்டு மீண்டும் வந்து அதே இடத்தில் வலை வைப்பதும் ஒரு சில வாரங்கள் நடந்தது. பிறகு அதே இடத்தில் பல சிலந்திகள் குடியேறின. வீட்டிற்கு வருபவர்கள் எல்லாம் தங்களுக்கு என்னமோ பேய் பங்களாவில் நுழைவது போல் இருப்பதாக கூறுவார்கள் ஆனாலும் நான் பிடிவாதமாக அந்த வலைகளை கலைக்கக் கூடாது என்று கூறி இருந்தேன். வேலை நிமித்தமாக வேறு இடம் செல்ல வேண்டி ஆனதால் அந்த வீட்டை மாற்ற வேண்டியது ஆயிற்று. பின்னர் எப்போதாவது இதே போல் சிலந்திகளுடன் நட்பு பாராட்ட கிடைக்குமா என்று தெரியவில்லை ஆனால் உங்கள் வீட்டில் எங்காவது சிலந்தி வலை இருந்தால் கொசு அடித்துப் போட்டு பாருங்கள். நான் தான் விலாவாரியாக எப்படி கொசு அடித்துப் போடுவது என்று மேலே கூறி இருக்கிறேனே? கொசுறு - அந்த சிலந்திக்கு நானும் என் மகளும் வைத்த பெயர் "இன்சி வின்சி". பல முறை நிலாச்சோறு மாதிரி சிலந்தி சோறு சாப்பிட்டிருக்கிறாள் அவள்.

பாம்பு பிடித்த அனுபவம் - 1

பூனாவில் எங்கள் அலுவலகம் மலை அடிவாரத்தில் இருந்ததையும் அங்கே சில பல ஜந்துக்கள் வந்து சென்று கொண்டிருந்ததையும் பற்றி எழுதி இருந்தேன். பாம்புகள் அங்கே அடிக்கடி இரவுகளில் தென்படும் ஆனால் ஒரு முறை பகலில் தண்ணீர் தொட்டி அருகே ஒரு பாம்பு சுருண்டு படுத்துக் கொண்டிருந்தது. நமக்கு தான் எல்லாத்துலையும் அறை குறை ஞானம் ஆச்சே. மெட்ராஸ் பாம்பு பூங்காவில் ராமுலஸ் விட்டேகர் எழுதிய "Common Indian Snakes" மற்றும் "A Field Guide of Indian Snakes" ஆகிய புத்தகங்களை வாங்கிப் படித்து பாம்புக்கும் மரவட்டைக்கும் வித்தியாசம் காணும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருந்தேன். பாம்புகள் தென்படும் போதெல்லாம் அது எந்த பாம்பு என்று சக ஊழியர்களிடம் பீலா விட்டுக்கொண்டிருப்பேன். இதில் பெரிய காமெடி என்னவென்றால் எனக்கு "கலர் பிலைண்ட்நெஸ்" உண்டு. அதனால் சில பல கலர்களில் குழப்பம். ( பலர் கலர் பிலைண்ட்நெஸ் என்றால் கருப்பு வெள்ளை தவிர மற்ற நிறங்கள் தெரியாதா என்று கேட்டதுண்டு). பகலில் இந்த பாம்பைப் பார்த்ததும் படு குஷி ஆகி விட்டேன். அதைக் கையில் பிடித்தால் என்ன என்று தோன்றியது. பாம்பு வேறு கொஞ்சம் சிறியதாக இருந்தது கொஞ்சம் தைரியத்தை கொடுத்தது. சின்ன நாகப் பாம்பு கொத்தினாலும் அம்பேல் தான் என்றெல்லாம் அப்போது தோணவில்லை. கூட இருந்த நண்பர்கள் (? அடப் பாவிகளா) வேறு உற்சாகப்படுத்தி (உசுப்பேத்தி) விட்டார்கள். சட்டென்று சென்று அதைப் பிடித்து விட்டேன். பாம்புக்கும் பிடி படுவது அது தான் முதல் முறை போலும். 2-3 முறை என்னை கொத்துவது போல் கை அருகே வந்தது. பிறகு என்ன நினைத்தோ பரிதாபப்பட்டு விட்டு விட்டது. அப்போது தான் உதித்தது ஞானோதயம் - இனியும் பாம்பு விளையாட்டு எல்லாம் வேண்டம் என்று. சற்று தொலைவில் இருந்த புதர் அருகே விட்டு விட முடிவு செய்தேன். வேகமாக ஓடினால் மானப் பிரச்சினை வேற. அதனால் முகத்தை தைரியமாக வைத்து கொண்டு பாம்பையும் உயிரையும் கையில் பிடித்து கொண்டு சென்று அந்த புதரில் விட்டு வந்தேன். அதன் பிறகு என்னை என்னமோ சின்ன வயதிலிருந்தே பாம்புகளோடு ஒட்டி உறவாடியவன் போல ஒரு இமேஜ் உண்டானது. எங்கள் அலுவலக சமையல் பெண்மணியும் அக்கம் பக்கத்திலெல்லாம் புகழை பரப்பி விட்டாள். பிறகு பொறுமையாக ஆராய்ச்சி செய்த பொது தான் தெரிந்து கொண்டேன் - அது "Trinket Snake" வகையை சேர்ந்தது, விஷமற்றது என்று. தமிழில் "அழகு பாம்பு" என்று போட்டிருந்தது ஆனால் நான் கேள்வி பட்டதில்லை ( அவ்வளவு தெரிந்து வைத்திருந்தேன்). அதன் பிறகு பின்னொரு முறை அலுவலகத்தில் வேறு ஒரு பாம்பு பிடித்தோம். அது வேறொரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி.

எங்கள் காவல் நாய்

பூனாவில் வேலை செய்து கொண்டிருந்த நாட்களில் எங்கள் அலுவலகம் ஒரு சின்ன மலையின் அடிவாரத்தில் இருந்தது. அருகில் வேறு வீடுகள் எல்லாம் அதிகம் இருக்காது. சுற்றி மரங்கள் எல்லாம் அதிகம் இல்லா விட்டாலும் செடிகள் புதர்கள் எல்லாம் நிறைய இருக்கும். நிறைய பறவைகள், பாம்புகள் (அவைகளை பற்றி விவரமாக பிறகு சொல்கிறேன்) எல்லாம் வரும். இவைகள் எல்லாம் இல்லாமல் தெரு நாய்கள் பல எங்கள் அலுவலகத்திற்கு அடிக்கடி வரும். மதிய உணவின் போது மிச்சம் ஆகும் சப்பாத்திகளை அவைகளுக்கு போட்டு நட்பு வளர்த்து வைத்திருந்தோம். அவைகளில் ஒரு நாய்கள் குடும்பம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு தாய் நாய் தன் குட்டிகளை கூட்டிக்கொண்டு வரும். 5 குட்டிகள் இருந்ததாக ஞாபகம். நாங்கள் போடும் சப்பாத்திகளை தன் வாயால் எடுத்து ஒவ்வொரு குட்டிக்கும் சமமாக பங்களித்து கொடுக்கும். இது போல் வேறு எந்த நாயும் செய்து நான் பார்த்தது இல்லை. குட்டிகள் எல்லாம் துரு துருவென இருக்கும். அந்தக் கூட்டம் வருவதை பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். மிகவும் ஆனந்தமாக விளையாடிக்கொண்டு மெதுவாக அவைகள் ஓடி வருவதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். மாலை 5:30 - 6:00 மணி அளவில் தினமும் வந்து கொண்டிருந்த அந்தக் கூட்டம் திடீர் என ஒரு நாள் வருவதை நிறுத்தி விட்டன. பிறகு சில நாட்கள் கழித்து குட்டிகள் மட்டும் வந்தன. மற்றவைகள் என்ன ஆயின என்ற கவலை இருந்த போதிலும் இவைகள் வந்ததே பெரிய சந்தோஷமாக இருந்தது. திடீரென ஒரு நாள் , ஒரு குட்டி மட்டும் வந்து வெளியே போட்டிருந்த பெஞ்சின் அடியில் படுத்து மிகுந்த வேதனையுடன் முனகிக்கொண்டிருந்தது. பார்த்தால் அதன் இடது பின்னங்கால் மீது ஏதோ ஸ்கூட்டர் போன்ற வாகனம் ஏறியது போல பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அந்த குட்டி மிகவும் உடல் இளைத்து போயிருந்தது. எங்களுக்கு அந்த குட்டி உயிர் பிழைக்கும் என தோன்றவில்லை. அந்த மரண வேதனையிலும் அந்த குட்டி எங்களை தேடி வந்திருந்தது. அதன் முன்னால் ஒரு குண்டாவில் பால் ஊற்றி வைத்தோம். எத்தனை நாட்களாக பட்டினி கிடந்ததோ தெரியவில்லை, மிகவும் சிரமப்பட்டு எழுந்து வந்து அந்த பால் முழுவதையும் குடித்து முடித்தது . மாலையில் சில பிரெட் துண்டுகளை பாலில் நலைத்து கொடுத்தோம். அவற்றையும் சாப்பிட்டு விட்டு முனகிக்கொண்டே படுத்திருந்தது. காலை பார்க்கும் போது உயிருடன் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு துளியும் இல்லை. ஆனால் அது நாளுக்கு நாள் உடல் நிலை முன்னேறி எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இடது பின்னங்கால் முழுவதும் செயல் இழந்து போனது. அடுத்த சில வாரங்களில் பழைய உற்சாகம் திரும்பியது. அது இப்போது எங்கள் அலுவலகத்தின் காவல் நாயாக மாறியது. யாராவது புதிய நபர்கள் வந்தால் அதற்கே உரிய மழலைக் குரலுடன் குரைத்துக் கொண்டு மூன்று கால்களில் வேகமாக ஓடி செல்லும். அதைப் பார்த்து வந்தவர்கள் பயந்து விடுவார்கள் ஆனால் எங்களுக்கோ சிரிப்பாக இருக்கும். இவ்வாறாக 2-3 மாதங்கள் எங்களுடன் மிகப்பிரியமாக இருந்த குட்டி ஒரு நாள் திடீரென காணாமல் போனது. எங்கள் அலுவலகத்தை விட்டு 100 மீட்டர் கூட தாண்டி போகாத அது வேறு எங்கும் சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்த போதும் ஒரு நப்பாசையில் அக்கம் பக்கத்தில் எல்லாம் தேடினோம். எங்கள் அலுவகத்தில் சமையல் வேலை செய்து வந்த ஒருவள் தான் அதை எப்போதும் கத்திக்கொண்டே இருப்பாள். அவள் மீது தான் எங்களுக்கு சந்தேகம். அதை எங்கோ எடுத்து சென்று விட்டு விட்டாள் என்பது எங்கள் ஐயம். 8-9 வருடங்கள் கடந்திருந்தாலும் இப்போது எழுதும் போது கூட வருத்தமாக இருக்கிறது.