ஆப்பிலிருந்து காப்பாற்றிய பாம்பு
Posted by
மனிதக்குரங்கு
on Friday, October 29, 2010
/
Comments: (0)
அது என்னமோ தெரியலை நமக்கும் பாம்புகளுக்கும் அப்படி ஒரு ராசி. என்ன பாம்பு என்றே தெரியாமல் பிலிம் காட்ட கையில் பிடித்த போதெல்லாம் கூட கடித்ததில்லை. ஒரு முறை கடவுளே பாம்பு வடிவில் வந்து அருள் புரிந்த சம்பவம் நடந்தது. எங்கள் மென்பொருளை புதிதாக இம்ப்ளிமென்ட் செய்திருந்த ஒரு வங்கியில் வருடக் கணக்கு முடிக்கப் பட வேண்டும். வங்கி இருந்தது தானாவில்.கட்டிடத்துக்கு பின்னால் ஒரே புதரும் செடியுமாக இருக்கும். போதாக் குறைக்கு ஒரு 1௦௦ மீட்டர் தொலைவில் ஒரு மூடப் பட்டிருந்த துணி மில் வேறு. அங்கு கண்ணாடி எல்லாம் உடைந்து, சுவர் எல்லாம் பாழ் அடைந்து பேய் பங்களா மாதிரியே இருக்கும். ராத்திரி ஆனால் நிலா வெளிச்சத்தில் வௌவால்கள் வேறு சுற்றி பறந்து கொண்டிருக்கும். முதல் முறை வந்த போது வங்கிக்குள் பணியாளர்கள் எல்லாம் பேய்களாக இருப்பார்களோ என்று நாங்கள் யோசித்தோம். இதில் என்ன விசேஷம் என்றால் பணியாளர்களில் மூவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பெண்கள். எல்லோரும் ஜான்சி ராணி, ராணி மங்கம்மாள் போன்றவர்களின் வாரிசுகள் போல. எப்போதும் போல் அங்கே சென்று தலையைக் காண்பித்து விட்டு வடை சாப்பிட்டு விட்டு எல்லோரையும் போல சூரியன் அஸ்தமிக்கும் முன் எஸ்கேப் ஆகிவிடலாம் என்று நினைத்து தான் அன்றும் நாங்கள் மூவர் சென்றோம். அங்கு போன பின்பு தான் தெரிந்தது டேட்டாவில் ஏதோ வில்லங்கம் என்று. என்ன பிரச்சினை என்று கண்டு பிடிக்கவே பல மணி நேரம் ஆகி விட்டது. நேரம் ஆக ஆக லேடீஸ் எல்லாம் டென்ஷன் ஆகி விட்டார்கள். பின்னாடி கும்பலாக நின்று கொண்டு மராட்டி, தமிழ், ஹிந்தி, கொங்கனி என்று எல்லா மொழிகளிலும் வசை பாடிக் கொண்டிருந்தார்கள். இந்த கூற்றுக்கு நடுவில் கவனம் செலுத்த தடுமாறிக்கொண்டிருந்த நேரம் பார்த்து மேனேஜர் ரூமிலிருந்து ஒரு பெரிய அலறல் சத்தம். மேனேஜர் அம்மா வேகமாக நடந்து கூடப் பார்த்திராத எங்களுக்கு அவர்கள் வெளியே ஓடி வந்த வேகம் பார்த்து என்ன நடந்தது என்று புரிய அதிக நேரம் தேவைப் படவில்லை. அவர்களுக்கு பின்னாடியே பலத்த ஒரு சீற்றத்துடன் ஒரு பெரிய பாம்பு வெளியே வந்தது. மறு கடைசிக்கு வந்து கதவுக்கும் க்ரில்லுக்கும் இடையில் புகுந்து கொண்டது. வெளியில் இருந்து தென்பட்டாலும் யாரும் அதை அடிக்கவோ, பிடிக்கவோ முயற்சிக்கவில்லை. என்னுடைய நல்ல நேரம் என்னுடைய பாம்பு புகழ் அறிந்தவர்கள் யாரும் அங்கு இல்லை. இது நடந்த ஐந்தே நிமிடத்தில் லேடீஸ் எல்லோரும் கிளம்பி விட்டார்கள். வாச்மேன் உள்ளிட்ட சிலர் அந்த பாம்பை வெளியே துரத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதுவும் நீயா நானா என்பது போல் சீறிக் கொண்டிருந்தது. ஒரு 30 நிமிடப் போராட்டத்திற்கு பிறகு அதை அங்கிருந்து வெளியேற்றினார்கள். இதற்கு பிறகு மீதம் இருந்தவர்கள் யாருக்கும் அங்கு இருக்க மனம் இல்லை. நாங்களும் டேட்டாவை காப்பி செய்து கொண்டு கிளம்பி ஆபீசுக்கு வந்து பொறுமையாக ராத்திரி வேலையை செய்து முடித்து அடுத்த நாள் காலை சென்று வங்கியில் போட்டோம். அப்போது தான் அங்கே வந்திருந்த ஒரு வாடிக்கையாளர் சம்பவம் அறிந்து, அது அந்த வட்டாரத்தில் வெகு நாட்களாக இருக்கும் ஒரு சாரைப் பாம்பு என்று கூறினார். இது வரை நான் அந்த மாதிரி சைசிலும் , நிறத்திலும் ஒரு சாரைப் பாம்பை பார்த்ததே இல்லை. எது எப்படியோ எங்களை ஆபபிலிருந்து காப்பாற்றிய பாம்புக்கு நன்றிகள் கோடிகூறி நீடூழி வாழ வணங்கி விட்டு வெளியேறினோம். வெகு நாட்களாக அங்கே சுற்றிக் கொண்டிருந்த போதிலும் அதை யாரும் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சிலர் ஒரு தண்ணீர் பாம்பை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தை பார்த்திருக்கிறேன்...