கோரக்பூர் அனுபவங்கள் - பிரியமாக வந்த மாடுகள்
Posted by
மனிதக்குரங்கு
on Sunday, December 7, 2008
/
Comments: (0)
வேலை நிமித்தமாக சில முறை உத்தர் பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் நகருக்கு சென்றதுண்டு. அந்த ஊரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், சின்ன வயதில் நாம் டிவியில் பார்த்த மால்குடி டேஸ் சீரியலில் பார்த்த மால்குடி மாதிரியே இருக்கும். ரொம்ப எளிமையான மக்கள், அதிகம் போக்குவரத்து எல்லாம் இருக்காது. சாப்பாடு எல்லாம் ரொம்ப நன்றாக இருக்கும், விலையும் கம்மி. ஊரையும் அந்த மக்களையும் பத்தி பேசனும்னா நிறைய பேசலாம். சில கஷ்டங்கள் இருந்தாலும் மிகவும் பிடித்திருந்தது. சரி, மேட்டருக்கு வருவோம். தினமும் ராத்திரி சாப்பிட்ட பிறகு அலுவலக நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வாக் போவது வழக்கம். ஹோட்டலுக்கு திரும்பி வரும் போது ஒரு தள்ளு வண்டியில் ஸ்வீட் விற்கும் பொடியனிடம் ரப்டி, பால் கோவா இந்த மாதிரி ஐட்டம் ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். அந்த இடத்தில் சில கடைகள் இருந்ததால் அங்கே மக்கள் சாப்பிட்டு போடும் வாழைப்பழ தோல் ஆகியவற்றை சாப்பிடுவதற்காக சில மாடுகள் எப்போதும் நிற்கும். அந்த ஊர் மக்கள் யாரும் விலங்குகளை ஒன்றும் செய்வதில்லை என்பதை நான் பல முறை பார்த்துள்ளேன். வயல்களில் வேலை செய்யும் போது ஆள் உயர கொக்குகள் எல்லாம் விவசாயிகளின் கூடவே நின்று மேய்ந்து கொண்டிருக்கும். சிட்டு குருவிகள், அணில்கள் எல்லாம் பயமின்றி நம் மிக அருகில் வந்து போய் வரும். நம்ம ஊர் மிலிட்டரி ஹோட்டல்களில் கூட இந்த ஐட்டம்கள் இப்போதெல்லாம் கிடைப்பதில்லை என்று நீங்கள் பார்த்திருக்கலாம். நம் ஊரில் லேகியம் ஆகாமல் மிச்சம் இருக்கும் குருவிகள், அணில்கள், கொக்குகள் எல்லாம் கொஞ்சம் உஷார் ஆகி விட்டன போலும். கோரக்பூரில் மாடுகளை எல்லாம் யாரும் தொந்தரவு செய்வதில்லை. ரோட்டில் படுத்திருந்தாலும் அவைகளை யாரும் அடித்து விரட்டுவதில்லை. அவைகளை கண்டு கொள்ளாமல் விட்டு வீடுவார்கள் அவ்வளவு தான். ஒரு முறை அங்கே ஏதோ ஸ்வீட் வெட்டிக்கொண்டு இருந்த போது அருகே நின்றிருந்த மாட்டின் தலையை தொட்டு தடவி கொடுத்தேன். அந்த மாட்டுடன் யாரும் அவ்வளவு அன்பு கட்டியதில்லை போலும். அது வந்து ஒரு சின்ன பூனைக்குட்டியைப் போல மேலே உரசிக்கொண்டு நின்றது. என்ன ஆச்சரியம் , இதை பார்த்த அங்கிருந்த ஒரு 4,5 மாடுகள் எல்லாம் வந்து அதே போல நின்றன. நானும் நண்பர்களும் ஆளுக்கொரு மாடாக தத்தெடுத்து , பசு நேசன்களாக மாறினோம். சுற்றி இருந்த மக்கள் எல்லாம் எங்களை விநோதமாக பார்த்தார்கள். அங்கே யாரும் விலங்குகளிடம் பெரிய அன்பு செலுத்துவதில்லை என்பது உண்மை தான். அன்பு செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை மிலிட்டரி ஹோட்டல்களில் அவைகளை ருசிப்பதை நிறுத்தினாலே போதும். சிட்டு குருவிகள், அணில்கள், மைனாக்கள் எல்லாம் இல்லாமல் ஒரு மாதிரியாக இருக்கிறது வீட்டில்.
செடிகளுக்கு உணர்வுகள் உண்டா?
Posted by
மனிதக்குரங்கு
on Wednesday, August 27, 2008
/
Comments: (0)
முட்டையிலிருந்து கோழி வந்ததா மாதிரி இதுவும் ஒரு விவாதிக்கத்தக்க மேட்டர் தான். மரங்களுக்கும் செடிகளுக்கும் உணர்வுகள் உண்டு என்பது என்னுடைய அனுபவப்பூர்வ கருத்து. இதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். பல வருடங்களுக்கு முன் நான் வேலை பார்த்து கொண்டிருந்த இடத்தில் ஜன்னல்களில் நிறைய செடிகள் வைத்திருந்தோம். ஒவ்வொருவர் சீட் முன்னால் இருக்கும் செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றுவது அவரவர் கடமை என்பது ஏழுதப்படாத விதி. எழுதப்பட்ட விதிகளையே நாம் மறந்து விடுகிறோம் என்கிற நிலையில் எழுதப்படாத இந்த விதியை நான் சில சமையங்களில் மறந்து விடுவேன். என் சீட் முன்னால் இருந்த செடி எந்த வகை என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இலைகள் எல்லாம் ஒரு வித சிவப்பு நிறத்தில் இருக்கும். சுமார் 2 அடி உயரத்தில் இருந்தது அந்த செடி. 2-3 நாட்கள் தண்ணீர் ஊற்ற சில சமையங்களில் மறந்து விடுவேன். அப்போதெல்லாம் அந்த செடி தன் இலைகள் எல்லாவற்றையும் ஜன்னல் உள் பக்கமாக சுருக்கிக்கொண்டு என்னை நோக்கி செய்கை செய்வது போல ஒரு உணர்வு வரும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த செடி மொத்தமாக ஜன்னல் கம்பியின் வெளிப்புறமாக தான் பொதுவாக இருக்கும். தண்ணீர் ஊற்றிய சில நிமிடங்களிலேயே அது தன்னுடைய இயல்பான நிலைக்கு சென்று விடும். இது என்னை மிகவும் கவர்ந்த விஷயம்.செடிகளை lie detector உடன் கனெக்ட் செய்து "நான் உன்னை வெட்டப்போகிறேன்" என்பது போல் ஏதாவது சொன்னால் அதில் ஒரு sudden spike வரும் என்று ஆய்வுகள் கூறுவதாக படித்திருக்கிறேன். எங்கள் வீட்டில் கூட நான் வைத்திருந்த செடிகள் எல்லாம் என் அன்பை உணர்ந்து வளர்வது போல் எனக்கு ஒரு நம்பிக்கை. செடிகளுடன் பேசினாலோ அல்லது இனிமையான இசை கேட்கும் படி செய்தாலோ செடிகள் நன்றாக வளர்கின்றன என்று கூட படித்திருக்கிறேன். உங்கள் கருத்து என்னவோ?
எல்லாம் நேரமடா சாமி
Posted by
மனிதக்குரங்கு
on Sunday, May 11, 2008
/
Comments: (4)
என்னுடைய நல்ல நண்பர் ஒருவர் இருக்கிறார். பல நாட்கள் என்னுடன் அலுவலகத்துக்கு சேர்ந்து செல்லும் பாக்கியம் பெற்றவர். ஆபீஸ் பஸ்சில் போகும் போது என்னுடைய பிளேடு மேட்டர் எல்லாத்தையும் தாங்கிக் கொள்ளும் நல்ல குணம் கொண்டவர். போகும் போது வானில் தென்படும் பறவைகள், தெருவில் தென்படும் நாய், மாடு, கழுதை போன்றவற்றை காட்டி ஏதாவது சொல்லுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொள்ளுவார். ஆனால் இயற்கை , இயற்கையின் அழகு போன்ற விஷயங்களில் அதிகம் ஆர்வம் இல்லாதவர். ஒரு முறை மேலே பறந்து கொண்டிருந்த பெலிகன் பறவையை அவரிடம் காட்டினேன். உற்று பார்த்துவிட்டு என்னை திரும்பி பார்த்து " காக்கா தானே?" அப்படினு கேட்டு ஒரு போடு போட்டார். சில மாதங்களுக்கு அப்பறம் எல்லா அப்பாவிகளைப் போல அவருக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. ஒரு நாள் எப்போதும் போல பேருந்தில் சென்று கொண்டு இருந்த போது திடீர் என்று ஒரு மரத்தைக் காட்டி "சூப்பரா இருக்குல்ல ?" அப்படின்னு சொன்னார். எதுவும் புரியாமல் அவரை பார்த்த போது "அந்த மரத்தோட பூவெல்லாம் பாருங்க, எவ்வளவு அழகா இருக்குன்னு..." அப்படினு சொன்னார். பெலிகனை பார்த்து காக்காவான்னு கேட்ட ஆள் இப்போ நானே கவனிக்காத ஒரு மரத்தோட பூவை எல்லாம் ரசிக்க ஆரம்பிச்சுட்டாரே அப்படினு யோசிச்சேன். எல்லாம் நேரமடா சாமி...
என்னுடைய முதல் பதிவு
Posted by
மனிதக்குரங்கு
on Thursday, May 1, 2008
/
Comments: (1)
எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை - எவன் எவனோ ப்ளாக் வெச்சிருக்கானே நாமும் கண்டிப்பா ஒன்னு ஆரம்பிக்கணும் அப்படின்னு. சில பேர் இம்சை பன்னறதுக்குனே ப்ளாக் எல்லாம் வெச்சிருக்காங்க :) ... சேரி ப்ளாக் எல்லாம் ஓசில ஆரம்பிச்சடலம் ஆனா எழுத மேட்டர் வேணுமே? எதை பத்தி எழுதலாம் அப்படின்னு இருந்த கொஞ்ச நஞ்ச மூளையையும் வெச்சு யோசிச்ச அப்போ தான் நம்ம குரங்கு புத்தி சூப்பரா வேலை செஞ்சு விலங்குகள் பத்தி எழுதலாம்னு ஒரு ஐடியா குடுத்துச்சு. விலங்குகள் பத்தி ஆராய்ச்சி பண்ணி எழுதற அளவுக்கு தான் நமக்கு ஒண்ணும் பெரிய ஞானம் கிடையாதே அதனால விலங்குகளுடன் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களும் விலங்குகள் சார்ந்த சில நிகழ்வுகளும் பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். எல்லா விலங்குகளுக்கும் நம்மை போலவே உணர்வுகள் இருக்கு அப்படிங்கறது என்னோட கருத்து. அப்போ ஆடு, கோழி எல்லாம் வெட்டி சாப்பிடும் போது அதோட உணர்வுகள் பத்தி யோசிக்க மாட்டியா அப்படினு கேட்டு மடக்க கூடாது. :) அவைகளும் நம்மில் பலரைப்போல அன்புக்கும், அனுதாபத்துக்கும் ஏங்கி நிற்கின்றன. அவைகளுக்கும் நம்மைபோல போர் அடிக்கும் தருணங்களும் உண்டு. விலங்குகள் மட்டும் இல்லை. செடிகளுக்கும் உணர்வுகள் இருப்பதாக நான் நம்புகிறேன். சில ஆய்வுகள் இது குறித்து கூறுவதாக கேள்வி. ஏதோ சொல்லறேன் , கருத்துக்களை சொல்லுங்கள். நல்லா இருந்தா பப்ளிஷ் பண்ணறேன். நன்றி . வணக்கம்.