தேர்தல் நேரமாச்சே, எல்லாக் கட்சிகளும் வாக்குறுதிகளை சும்மா அள்ளி விட்டுக்கிட்டு இருக்காங்க. டிவி போய் லேப்டாப் வந்துடுச்சு. ஆஹா நம்ம தமிழகம் எவ்வளவு வேகமா விஞ்ஞான வளர்ச்சி அடஞ்சிகிட்டிருக்கு. அதை விட என்னை மிகவும் கவர்ந்த வாக்குறுதிகள் எல்லாம் நம்ம சொந்தங்களை பற்றியது தான். அதாங்க, இலவசமா ஆடு, மாடு எல்லாம் குடுக்க போறாங்களாம். சரி போன தடவை நம்ம பேருல எவனும் டிவி யை வாங்கிட்டு போயிடக் கூடாதுன்னு டிவியை வாங்கிட்டு வந்து வெச்சுட்டோம். இந்த தடவை ஆடு மாடு எல்லாம் வாங்கி எங்க வெக்கறது? சரி, எது எப்படியோ ஆகட்டும் நானும் மனிதக் குரங்கு முன்னேற்ற கழகம் ஆரம்பிக்க்கறதுனு முடிவு பண்ணிட்டேன். வாக்குறுதிகள் எல்லாம் ரெடி இனி குரங்குகளை சேக்க வேண்டியது தான் பாக்கி . நம்ம வாக்குறுதிகள் எதுவும் லேப்டாப், பஸ் பாஸ் இந்த மாதிரி எல்லாம் இருக்காது. முற்றிலும் இயற்கை சார்ந்த விஷயங்கள் தான்
1 . தண்ணீர் வசதி உள்ள கிராமப்புற மக்களுக்கு வீட்டுக்கு ஒரு நீர் யானை கொடுப்போம்
2 . தண்ணீர் வசதி கம்மியாக இருக்கும் கிராமங்களில் வீட்டுக்கு ஒரு ஒட்டகம் கொடுப்போம்
3 . தண்ணீர் வசதியைப் பொறுத்து வீட்டுக்கு ஒரு திமிங்கலம், சுறா மீன், வஞ்சிரம் இல்லா விட்டால் குறைந்த பட்சம் ஒரு கோல்ட் பிஷ் கொடுப்போம்
4 . விவசாயிகளுக்கு நெல் அறுவடை செய்ய உதவியாக வீட்டுக்கு ஒரு யானை கொடுப்போம்
5 . கிராம மற்றும் நகர மக்களுக்கு வீட்டு காவலுக்கு நாய்கள் கொடுப்போம்
6 . பத்து வயதுக்கு உள்பட்ட சிறார்களுக்கு பொமரேனியன் நாய்களும், பத்து வயது மேற்பட்ட சிறுவர்களுக்கு அல்சேஷன் நாய்களும் கொடுப்போம்
7 . மின் பற்றாக்குறை காரணமாக இருட்டில் மூழ்கி இருக்கும் கிராமங்களில் லைட் வசதி செய்து கொடுப்பதற்காக மின் மினி பூச்சி பண்ணைகள் அமைப்போம்
இதெல்லாம் கற்பனை தான் ஆனால் ஒன்னு மட்டும் உண்மை. இன்னும் சில வருடங்களில் நம்ம மக்களுக்கு அறிவு புகட்ட வீட்டுக்கு ஒரு மனிதக் குரங்கு கொடுக்க வேண்டி இருக்கும்
மனிதக் குரங்கின் தேர்தல் வாக்குறுதிகள்
Posted by
மனிதக்குரங்கு
on Thursday, March 31, 2011
/
Comments: (0)
ஆப்பிலிருந்து காப்பாற்றிய பாம்பு
Posted by
மனிதக்குரங்கு
on Friday, October 29, 2010
/
Comments: (0)
அது என்னமோ தெரியலை நமக்கும் பாம்புகளுக்கும் அப்படி ஒரு ராசி. என்ன பாம்பு என்றே தெரியாமல் பிலிம் காட்ட கையில் பிடித்த போதெல்லாம் கூட கடித்ததில்லை. ஒரு முறை கடவுளே பாம்பு வடிவில் வந்து அருள் புரிந்த சம்பவம் நடந்தது. எங்கள் மென்பொருளை புதிதாக இம்ப்ளிமென்ட் செய்திருந்த ஒரு வங்கியில் வருடக் கணக்கு முடிக்கப் பட வேண்டும். வங்கி இருந்தது தானாவில்.கட்டிடத்துக்கு பின்னால் ஒரே புதரும் செடியுமாக இருக்கும். போதாக் குறைக்கு ஒரு 1௦௦ மீட்டர் தொலைவில் ஒரு மூடப் பட்டிருந்த துணி மில் வேறு. அங்கு கண்ணாடி எல்லாம் உடைந்து, சுவர் எல்லாம் பாழ் அடைந்து பேய் பங்களா மாதிரியே இருக்கும். ராத்திரி ஆனால் நிலா வெளிச்சத்தில் வௌவால்கள் வேறு சுற்றி பறந்து கொண்டிருக்கும். முதல் முறை வந்த போது வங்கிக்குள் பணியாளர்கள் எல்லாம் பேய்களாக இருப்பார்களோ என்று நாங்கள் யோசித்தோம். இதில் என்ன விசேஷம் என்றால் பணியாளர்களில் மூவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பெண்கள். எல்லோரும் ஜான்சி ராணி, ராணி மங்கம்மாள் போன்றவர்களின் வாரிசுகள் போல. எப்போதும் போல் அங்கே சென்று தலையைக் காண்பித்து விட்டு வடை சாப்பிட்டு விட்டு எல்லோரையும் போல சூரியன் அஸ்தமிக்கும் முன் எஸ்கேப் ஆகிவிடலாம் என்று நினைத்து தான் அன்றும் நாங்கள் மூவர் சென்றோம். அங்கு போன பின்பு தான் தெரிந்தது டேட்டாவில் ஏதோ வில்லங்கம் என்று. என்ன பிரச்சினை என்று கண்டு பிடிக்கவே பல மணி நேரம் ஆகி விட்டது. நேரம் ஆக ஆக லேடீஸ் எல்லாம் டென்ஷன் ஆகி விட்டார்கள். பின்னாடி கும்பலாக நின்று கொண்டு மராட்டி, தமிழ், ஹிந்தி, கொங்கனி என்று எல்லா மொழிகளிலும் வசை பாடிக் கொண்டிருந்தார்கள். இந்த கூற்றுக்கு நடுவில் கவனம் செலுத்த தடுமாறிக்கொண்டிருந்த நேரம் பார்த்து மேனேஜர் ரூமிலிருந்து ஒரு பெரிய அலறல் சத்தம். மேனேஜர் அம்மா வேகமாக நடந்து கூடப் பார்த்திராத எங்களுக்கு அவர்கள் வெளியே ஓடி வந்த வேகம் பார்த்து என்ன நடந்தது என்று புரிய அதிக நேரம் தேவைப் படவில்லை. அவர்களுக்கு பின்னாடியே பலத்த ஒரு சீற்றத்துடன் ஒரு பெரிய பாம்பு வெளியே வந்தது. மறு கடைசிக்கு வந்து கதவுக்கும் க்ரில்லுக்கும் இடையில் புகுந்து கொண்டது. வெளியில் இருந்து தென்பட்டாலும் யாரும் அதை அடிக்கவோ, பிடிக்கவோ முயற்சிக்கவில்லை. என்னுடைய நல்ல நேரம் என்னுடைய பாம்பு புகழ் அறிந்தவர்கள் யாரும் அங்கு இல்லை. இது நடந்த ஐந்தே நிமிடத்தில் லேடீஸ் எல்லோரும் கிளம்பி விட்டார்கள். வாச்மேன் உள்ளிட்ட சிலர் அந்த பாம்பை வெளியே துரத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதுவும் நீயா நானா என்பது போல் சீறிக் கொண்டிருந்தது. ஒரு 30 நிமிடப் போராட்டத்திற்கு பிறகு அதை அங்கிருந்து வெளியேற்றினார்கள். இதற்கு பிறகு மீதம் இருந்தவர்கள் யாருக்கும் அங்கு இருக்க மனம் இல்லை. நாங்களும் டேட்டாவை காப்பி செய்து கொண்டு கிளம்பி ஆபீசுக்கு வந்து பொறுமையாக ராத்திரி வேலையை செய்து முடித்து அடுத்த நாள் காலை சென்று வங்கியில் போட்டோம். அப்போது தான் அங்கே வந்திருந்த ஒரு வாடிக்கையாளர் சம்பவம் அறிந்து, அது அந்த வட்டாரத்தில் வெகு நாட்களாக இருக்கும் ஒரு சாரைப் பாம்பு என்று கூறினார். இது வரை நான் அந்த மாதிரி சைசிலும் , நிறத்திலும் ஒரு சாரைப் பாம்பை பார்த்ததே இல்லை. எது எப்படியோ எங்களை ஆபபிலிருந்து காப்பாற்றிய பாம்புக்கு நன்றிகள் கோடிகூறி நீடூழி வாழ வணங்கி விட்டு வெளியேறினோம். வெகு நாட்களாக அங்கே சுற்றிக் கொண்டிருந்த போதிலும் அதை யாரும் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சிலர் ஒரு தண்ணீர் பாம்பை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தை பார்த்திருக்கிறேன்...
உண்மையா இருககுமோ?
Posted by
மனிதக்குரங்கு
on Friday, March 26, 2010
/
Comments: (0)
பல வருடங்களுக்கு முன் ரீடர்ஸ் டைஜெஸ்டில் ஒரு விஷயம் வந்திருந்தது. அதாவது எந்த மிருகம் மனிதர்களைப் போலவே குணம் படைத்தது என்று. நாய்கள் மனிதர்களை தங்கள் எஜமனர்களாய்ப் பார்க்குமாம். பூனைகள் தாங்கள் தான் மனிதர்களின் எஜமானர்கள் என்று நினைக்குமாம். பன்றிகள் தான் தங்களை மனிதர்களுக்கு சமம் என்று நினைக்குமாம். எப்படி தான் இதெல்லாம் கண்டு பிடிப்பாங்களோ தெரியாது, ஆனால் இதில் கொஞ்சம் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. நாய்கள் எப்போதும் தெரிந்த நபர்களைப் பார்த்தால் வாலை ஆட்டிக்கொண்டு, கால்களை மேலே போட்டு ஓவர் குஷியாகி விடும். அடித்து விரட்டினாலும் அடுத்த முறை மீண்டும் இதையே தான் செய்யும். அப்படியே கொஞ்சம் பயந்து கொண்டு இப்படி செய்யா விட்டாலும் மீண்டும் கூப்பிடும் போது பழையதை எல்லாம் மறந்து விட்டு அப்படியே தான் செய்யும். ஆனால் பூனைகள் அப்படி இல்லை. நாம் எவ்வளவு தான் கூப்பிட்டாலும் அவைகளுக்கு தோன்றும் போது தான் நம்மிடம் வரும். மற்ற நேரங்களில் "நீ எல்லாம் ஒரு மனுஷனா?" என்று கேட்பது போல பார்த்து விட்டு போய் விடும். சற்றும் எதிர்பாராத வேளையில் ஒரு சின்ன மியாவ் போட்டு நம் கால்களை உரசி சென்று என்னமோ நம் மேல் ரொம்ப பாசம் இருப்பது போல் பாவ்லா பண்ணி விட்டு போகும். ( நிஜ) பன்றிகளிடம் அதிகம் ஒட்டி உறவடியதில்லை, அதனால் அவை எப்படி என்று தெரியாது. கடைசி சில நாட்களாக ஆபீசில் டேமஜெர்களிடம் சிக்கி நாய் படாத பாடு படும் போது ஏனோ பூனைகள் ஞாபகம் வந்து தொலைக்கிறது.
மனிதக் குரங்கின் நண்பர்கள்
Posted by
மனிதக்குரங்கு
on Friday, November 20, 2009
/
Comments: (0)
ரொம்ப நாட்களாக என் நண்பரிகளிடம் இருந்து ஒரு கம்ப்ளைன்ட். மற்ற மிருகங்களைப் பற்றி மட்டுமே எழுதறியே , எங்களைப் பத்தியும் ஏதாவது எழுது என்று டார்ச்சர் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். எல்லோருடைய சிறப்புகளைப் பற்றியும் எழுத முடியாது என்பதால் சிறப்பு பெயர்கள் பெற்றிருந்த சிலரைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன். படித்துக் கொண்டிருக்கும் போது நம்முடன் பல்பு, ப்ளேடு போன்ற அக்றிணை பெயர்கள் யாருக்காவது வைக்கப் பட்டிருக்கும். கொக்கு என்று பெயர் சூட்டப் பெற்ற நபர்கள் நம்முடைய மத்தியில் பலர் உலாத்தி இருந்திருப்பார்கள். ஆனால் என்னை மிகவும் கவர்ந்த இருவர் பற்றி அவசியம் கூற வேண்டும். ஒருவன் பெருச்சாலி - பார்ப்பதற்கு ஒன்னும் அப்படி இருக்க மாட்டான், சொல்லப் போனால் ஒல்லியாகத் தான் இருப்பான். அவனுடைய குணாதிசியம் விநோதமானது. தூங்கப் போகும் போது எல்லோரையும் போல மெத்தை மேல் தான் படுத்திருப்பான், ஆனால் இரவில் எப்போது என்ன ஆகுமோ தெரியாது காலையில் எழுந்து பார்த்தால் மெத்தைக்கு கீழே படுத்திருப்பான். ஒல்லியாக வேறு இருந்ததால் சில சமயங்களில் ஆள் இருக்கானா இல்லையா என்றே தெரியாது. காலை எழுந்த உடன் தலையை பயங்கரமாக சொறிய ஆரம்பித்து விடுவான். அந்த சத்தம் ஒரு வேளை பெருச்சாலி மண்ணைப் பறிப்பது போல இருந்ததோ என்னவோ அவனுக்கு அந்தப் பெயரே சூட்டப் பெற்றிருந்தது. வகுப்புகளுக்கு செல்ல நேரம் ஆகி விட்டால் இவனை எழுப்புவதற்காக எங்கள் நண்பன் ஒருவன் ஒரு விசேஷ முறை வைத்திருந்தான். கிட்டே சென்று மெத்தையை எட்டி உதைப்பான். " அடிங்க" என்று அடியில் இருந்து குரல் வந்தால் ஆள் இருக்கிறான் என்று தெரிந்து கொள்வோம். அப்போது மூஞ்சுறு போல இருந்தவன் சமீபமாக பார்த்த போது உண்மையிலயே பெருச்சாலி மாதிரி தான் பெருத்திருந்தான். அடுத்தது காண்டா என்று வெறுப்புடன் அழைக்கப் பெற்ற காண்டா மிருகம். இவனும் எங்கள் அறைத் தோழன் தான். இவன் சற்று குண்டாக இருப்பான். நடக்கும் போது எதிரில் யார் வருகிறார்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டான். அனிமல் பிளானெட்டில் காண்டா மிருகத்திடம் பிலிம் காட்டிக் கொண்டிருக்கும் நபரை அது எப்படி தாக்க முயலும் என்பதை கண்டிருப்பீர்கள். தலையை கீழே குனிந்து கொண்டு வேகமாக ஓடி வரும் காண்டா மிருகத்தைப் போல தான் இவனும் நடப்பான். என்றாவது ஒரு நாள் அதிசயமாக சீக்கிரம் எழுந்து விட்டால் ரூமுக்குள் இங்கும் அங்கும் நடந்து எங்கள் தூக்கத்தை கெடுத்து வசை வார்த்தைகளை வாங்கிக் காட்டிக் கொள்வான். இவனுக்கு இப்போது ஒரு சின்ன காண்டா இருப்பதாக தகவல்.
பாம்பு பிடித்த அனுபவம் - 2
Posted by
மனிதக்குரங்கு
on Friday, July 10, 2009
/
Comments: (1)
பூனாவில் எங்களுடைய அலுவலகம் முதலில் ஒரு மலை அடிவாரத்தில் இருந்தது. பின்னர் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்துக்கு மாற்றி வந்தோம். அங்கு சென்றும் என்னுடைய பாம்பு புகழ் தொடர்ந்து வந்தது. ஒரு நாள் மாலை நேரம் தம் அடிக்க சென்ற நண்பர்கள் (?) பார்க்கிங்கில் ஒரு பாம்பு சுருண்டு படுத்திருப்பதாக வந்து பிரேக்கிங் நியூஸ் கொடுத்தார்கள். இதைக் கேட்டதும் எனக்கு வில்லங்கம் வரப்போகிறது என்று புரிந்து விட்டது. உடனே அது வரை கம்ப்யூட்டரில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நான், படு பிஸியாக இருப்பது போல் பாவ்லா பண்ண ஆரம்பித்தேன். ஆனாலும் இந்த துரோகிககள் படை சூழ கீழே செல்ல வேண்டியதாயிற்று. போகும் பொது, இது பச்சை பாம்பு போல் எனக்கு தெரிந்த, விஷமற்ற பாம்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். ஆனால் அதுவோ எனக்கு தெரியாத ஒரு இனமாக கறுப்பு / பிரவுன் நிறத்தில் இருந்தது. என்ன பாம்பு என்று பீலா விடலாம் என்று யோசித்து கொண்டிருந்தத போது அந்த பாம்பை என்ன செய்யலாம் என்று வேறு ஒரு விவாதம் கிளம்பியது. சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அதை அடித்து விடலாம் என்று சொன்னார்கள், ஆனால் என்னுடைய துரோகிகள் படையோ என்னைக் காட்டி - இவன் வெறும் கையிலயே பாம்பை பிடிப்பான் என்று கூறி பில்ட் அப் குடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதைக் கேட்ட கூட்டம் படு குஷியாகி விட்டது. அதைப் பிடித்து காத்ரஜ் பாம்புப் பூங்காவிற்கு தகவல் கொடுக்கலாம் என்று ஒட்டு மொத்தமாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பாம்பைக் கையில் பிடித்து அப்பறம் எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவா? இப்போது இருட்டாகி விட்டது அதனால் கையில் பிடிப்பது நல்லதில்லை என்று ஒரு வழியாக மக்களை நம்ப வைத்தேன். அதை ஒரு பக்கெட்டினுள் செல்ல வைத்து அடைத்து வைப்பதென்று முடிவு மாற்றப் பட்டது. இதைக் கேட்ட கூட்டம் ஒட்டு மொத்தமாக கலைந்தது - என்னுடைய அலுவலக எதிரிகள் தவிர. அந்த பாம்பை பக்கெட்டினுள் செல்ல வைப்பதற்குள் நாங்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. அமைதியாக இருந்த அது, நாங்கள் சுற்றி பக்கெட்டும் குச்சியுமாக நிற்பதை பார்த்து கடும் சினத்திற்கு உண்டானது. இவ்வளவு பெரிய சத்தத்துடன் இப்படி ஒரு பாம்பு சீர முடியும் என்று அப்போது தான் தெரிந்து கொண்டேன். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்புக்கே போர் அடித்து விட்டதோ என்னமோ, ஒரு பக்கெட்டினுள் சென்று விட்டது. அப்பாடா என்று, எடுத்து சென்று ஒரு பாத் ரூமில் வைத்தோம். பாம்பு பூங்காவிற்கு போன் செய்த போது, 2 நாட்களுக்கு பிறகு தான் வர முடியும் என்று கூறி விட்டார்கள். அது வரை எங்களுக்கு ஒரே பயம், எப்படியாவது தப்பித்து வெளியே வந்து விட்டால் என்ன செய்வதென்று. 2 நாட்கள் பிறகு ஒரு வெள்ளைக்காரர் உட்பட 3 பேர் வந்தார்கள். அவர்களில் ஒருவர் பாம்பைப் பார்த்தும் டக்கென்று கையை விட்டு எடுத்து விட்டார். அவர் கூறியது - இது Trinket Snake என்று. அடாடா, மீண்டும் ஒரு அழகு பாம்பா என்று நினைத்தேன். தெரிந்திருந்தால் நானே கையில் பிடித்திருப்பேனே? முன்னர் பிடித்தது ஒரு பாம்பு குஞ்சு போலும், அதனால் அதன் நிறம் வேறு மாதிரியாக இருந்தது. அவரிடம் இருந்து பாம்பை வாங்கி கொஞ்சம் டேமேஜ் கன்ட்ரோல் செய்து கொண்டேன். அப்படியும் எங்கள் அலுவகத்தில் என்னைத் தவிர வேறு யாரும் அந்த பாம்பை கையில் எடுக்க முன் வரவில்லை என்பதை நினைத்து மனதை தேற்றிக் கொண்டேன் - வேறு என்ன செய்ய முடியும்?
காக்கா கதைகள் - 1
Posted by
மனிதக்குரங்கு
on Friday, June 12, 2009
/
Comments: (1)
நம்மை சுற்றி எப்போதும் இருப்பதாலோ என்னவோ காக்கைகளைப் பற்றி நாம் எப்போதும் அதிகம் கண்டுகொள்வது கிடையாது. ஆனால் பறவை இனங்களிலேயே மிகவும் புத்திசாலியானது என்று கருதப்படுவது நம் காக்கையார் தான். சென்னையில் இருந்த போது என் அம்மா தினமும் மதிய உணவிற்கு பிறகு ஒரு காக்காவிற்கு ஏதாவது சாப்பிட வைப்பார்கள். தவறாமல் தினமும் அதே நேரத்திற்கு வந்து முதலில் அமைதியாக இருக்கும். ஏதாவது வேலையாக இருந்து ஆகாரம் வைக்க சில நிமிடங்கள் தாமதம் ஆனால் ஒரெ ஒரு முறை "கா" என்று கத்தும். அப்படியும் தாமதம் ஆனால் தன் மூக்கினால் ஜன்னல் கண்ணாடியை கொத்தும். வேறு ஏதாவது ரூமில் இருந்தால் மற்ற ஜன்னல்களில் சென்று இதையே செய்யும். ஒரு நாளும் சாதம் உண்ணாது, சப்பாத்தி, பூரி, தோசை இது மாதிரி ஏதாவது டிபன் ஐட்டம் மட்டும் தான் சாப்பிடும். பூனாவில் இருந்த போது தினமும் இதே மாதிரி பால்கனி சுவற்றின் மேல் மீதமாகும் ஏதாவது உணவுகளை காக்கைகளுக்காக வைப்போம். நேரம் தவறாமல் தினமும் அதே நேரத்தில் பல காக்கைகள் வரும்.நாங்களும் பந்தியில் பரிமாறுவது போல் தீரத் தீர கொஞ்சம் உணவு வைப்போம். ஒரு நாள், வீட்டில் எல்லோரும் ஊருக்கு போயிருந்தார்கள்- நானும் முந்தைய நாள் இரவு எதுவும் சமைக்கவில்லை. நேரத்திற்கு வரும் காக்கைகள் ஏமாந்து போய்விடுமே என்று எதாவது இருக்கிறதா என்று தேடினேன். பிரிட்ஜில் இருந்த பால் கோவா (பேடா) தவிர வேறு எதுவும் இல்லை. ஒரு 10 துண்டுகளை வெளியில் வைத்து விட்டு ஆபீஸ் சென்று விட்டேன். சாயந்திரம் பால்கனியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது பார்த்தால் சுவற்றின் மேல் ஏதோ ஒரு காட்டுப்பூ இருந்தது. அது எப்படி அங்கு வந்ததோ தெரியவில்லை. எனக்கு என்னமோ ஒரு காக்கா தான் ஸ்வீட்டுக்கு நன்றி சொல்லி வைத்ததோ என்று ஒரு கற்பனை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. நாம் செய்யுளில் படித்தது போல் உணவு உண்ணும் போது அவை மற்ற காக்கைகளை கரைந்து அழைப்பதெல்லாம் இல்லை. ஒரு வேலை சங்க காலத்தில் அவை அப்படி இருந்திருக்கலாம். மனிதர்கள் போலவே காலப் போக்கில் அவைகளும் சுய நலமும், பொறாமையும் கொண்டவைகளாக மாறி விட்டன போலும். நம் இனத்தவர் என்ன ஆனால் என்ன, எனக்கு குவாட்டரும், பிரியாணியும் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் இந்த காலத்தில் காக்கைகள் மட்டும் இப்படி இருப்பதில் என்ன ஆச்சரியம்?
நாய் புத்தி ?
Posted by
மனிதக்குரங்கு
on Wednesday, May 13, 2009
/
Comments: (2)
நாய் புத்தி என்று அடிக்கடி மற்றவர்களை திட்டுவோம். எதற்காக இந்த மாதிரி திட்டுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் நான் அறிந்த சில நாய்களின் குணாதிசியங்களை சொல்லுகிறேன். சிறுவனாக இருந்த போது என் பெரியம்மா டாமி என்று ஒரு பொமரேனியன் நாய் வைத்திருந்தார்கள். அவர்களுடைய வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் என்னை மனுஷனாகக் கூட மதிக்காது. அதை வாக்கிங் கூட்டிப் போவதற்காக இருந்த செயினை யாரவது தொடும் சத்தம் கேட்டால் எங்கிருந்தாலும் அப்படி ஒரு கூச்சல் போட்டுக் கொண்டு வரும். மனிதர்களைப் போலவே பொசெசிவ் குணம் கொண்டது. ஆனால் நாங்கள் ஊருக்கு கிளம்பும் போது மிகவும் சோகமாக ஆகிவிடும். பஸ் ஸ்டாப் செல்லும் போது அது திரும்பி வீட்டுக்கு செல்லும் படி இழுக்கும். பின்னர் அதற்கு வயதான பின்பு கேடராக்ட் வந்து சுத்தமாக கண் தெரியாமல் போய் விட்டது. அப்போதெல்லாம் மனிதர்களுக்கே கேடராக்ட் ஆபரேஷன் என்பது மிகக் கடினமான ஒரு அறுவை சிகிச்சையாக இருந்தது. அதனால் அதற்கு ஒன்றும் செய்ய இயலவில்லை. அப்போது அது மிகவும் அமைதியாக இருக்கும். அதனிடம் பேசினால் வாலை மட்டும் மெதுவாக ஆட்டிக்கொண்டிருக்கும், சத்தம் எதுவும் போடாது - பழுத்து பக்குவம் அடைந்த ஒரு ஞாநி போல இருக்கும். அடுத்து சென்னையில் எங்கள் வீட்டின் அருகே இருந்த ஒரு நாய் - பெயர் மீனா . எனக்குத் தெரிந்து தமிழ் பெயர் சூட்டப்பட்டிருந்த முதல் நாய் அது தான். இப்போதெல்லாம் நம் கிராமங்களில் கூட குழந்தைகளுக்கே தமிழ் பெயர் யாரும் வைப்பதில்லை. பரம சாதுவான மீனாவும் எங்கள் அனைவரின் செல்லப் பிராணியாக திகழ்ந்தது. என் அம்மா வீட்டின் அருகே இருக்கும் ஒரு சின்ன கோவிலுக்கு தினமும் போவது வழக்கம். தவறாமல் மீனாவும் என் அம்மாவுடன் செல்லும். சாமி கும்பிடும் போது அமைதியாக இருந்து, பரிகாரத்தை சுற்றும் போது அதுவும் சுத்தும். ( பக்திமான் போல பக்திநாய்? ) கடைசியாக என் மாமா வீட்டு கருப்பு நாய் - பெயர் கரியான். அந்த ஏரியாவின் தாதா, முடிசூடா மன்னன் எல்லாம் அவன் தான். வட்டாரத்து நாய்களை எல்லாம் கூட்டு சேர்த்திக்கொண்டு அவர்கள் பின் தொடர ஏரியாவை வளம் வருவான். வீட்டுக் காம்பவுண்டுக்குள் எதாவது பாம்பு வந்துவிட்டால் அதை மோப்பம் பிடித்து கொன்று விடுவான். விரியன் பாம்பு கடித்து பரலோகத்தின் நுழைவாயில் வரை சென்று திரும்பியும் சற்றும் வீரம் குறையாத அஞ்சா நெஞ்சன். ஆனால் எங்கள் வீட்டு கேட்டை தாண்டி வர மாட்டான். அந்த ஏரியாவுக்கு என் பெற்றோர்கள் குடி வந்த புதிதில் கேட்டைத் தாண்டி உள்ளே வந்து போர்டிகோவில் இருக்கும் ஒரு தூணின் மேல் மூச்சா போவது வழக்கமாக கொண்டிருந்தானாம். இதனை வன்மையாக கண்டித்த என் அம்மாவின் வசை வார்த்தைகளை கண்டு பயந்தோ அல்லது ரோஷம் வந்தோ எங்கள் வீட்டு கேட்டை தாண்டி இப்போதும் வருவதில்லை. கடை வீதியில் தாதா போல உலா வரும் நபர் பூ விற்கும் பாட்டியிடமோ அல்லது பெட்டி கடை வைத்திருக்கும் பெண்மணியிடமோ திட்டு வாங்குவதில்லையா அந்த மாதிரி தான். நம்மில் பலர் எத்தனை பேர் இது மாதிரி இருக்கிறோம்? இப்படிப் பட்ட நாய்களை எல்லாம் பார்க்கும் போது ஒரு வேளை நாய்கள் எல்லாம் தங்களுக்குள் "உனக்கு ஏன் இந்த மனுஷ புத்தி ?" என்று கேட்டுக்கொள்ளுமோ என்று தோன்றுகிறது.